Sri LakshmiNarasimha Foods

Ph: 9361570105
Email: ballavaa21@gmail.com

உடல் வலியை போக்கும் அரைக்கீரை

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தசோகையை போக்கவல்லதும், உடல் வலியை சரிசெய்ய கூடியதும், முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான அரைக்கீரையின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது அரைக்கீரை. இரும்புச்சத்து நிறைந்த இது, ஹீமோகுளோபினை அதிகரிக்க வல்லது. ரத்தசோகையை போக்கும் உணவாக விளங்குகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தினமும் அரை கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிடுவதால் ஆண்மை பெருகும். உடல் பலம் பெறும். ஆரோக்கியத்தை தரவல்ல முக்கியமான கீரையாக இது விளங்குகிறது. அரைக்கீரையை பயன்படுத்தி ரத்தசோகையை போக்கும், உடலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:* அரைக்கீரை, நெல்லி வற்றல், பனங்கற்கண்டு. *செய்முறை:* அரைக்கீரை, நெல்லி வற்றலை பசையாக அரைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தினமும் ஒருவேளை எடுத்துவர ஹீமோகுேளாபின் அதிகமாகி ரத்த சோகை இல்லாமல் போகும். உடல் பலம் பெறும். அரைக்கீரை மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது. குடல் புண் வராமல் காக்கும். ஆசனவாய், மலக்குடலில் புற்றுவராமல் தடுக்கிறது. அரைக்கீரையை பயன்படுத்தி காய்ச்சல், உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:* அரைக்கீரை, மிளகுப்பொடி, மஞ்சள்பொடி, தேன். *செய்முறை:* அரைக்கீரை ஒரு பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்துவர காய்ச்சல், உடல் வலி சரியாகும். அரைக்கீரையில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இது வாதம், பித்தத்தை சமன்படுத்தும் தன்மை உடையது. அரைக்கீரை விதைகளை பயன்படுத்தி முடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:* அரைக்கீரை விதை, நெல்லி வற்றல், தேங்காய் எண்ணெய். *செய்முறை:-* ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் அரைக்கீரை, நெல்லிவற்றல் கலந்த பசை, அரைக்கீதை விதைப்பொடி சேர்த்து கலந்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி தலைக்கு தேய்த்துவர தலைமுடி கருப்பாகும். உடல் குளிர்ச்சி பெறும். நல்ல உறக்கத்தை தூண்டும். நாட்டு மருந்து கடைகளில் அரைக்கீரை விதை கிடைக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட அரைக்கீரையை அடிக்கடி பயன்படுத்தி வர உடல் நலம் பெறும். பேன் தொல்லையை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். *தேவையான பொருட்கள்:* பாதாம், வினிகர். *செய்முறை:* 5 பாதாம் பருப்பை ஊறவைத்து விழுதாக்கி, வினிகர் சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு பூசி வைத்திருந்து குளிப்பதால் பேன் தொல்லை விலகிப்போகும். முடி ஆரோக்கியம் பெறும். *தொகுப்பு:- அகத்தியர் ஹெர்பேரியம், ஏற்காடு.*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart